கதை சொல்லல். 2014 – 2

August 8, 2014

uthawi.story.2014.2 from uthawi on Vimeo.

கதை சொல்லல். 2014 – 1

June 3, 2014

uthawi.story.2014.1 from uthawi on Vimeo.

விடியல் 2013

April 6, 2014

vidiyal2013_4விடியல் 2013,
கே/தெ/கந்தலோயா தமிழ் வித்தியாலயம்,
நாவலப்பிட்டி,
இலங்கை.
25.3.2014

உதவி.நண்பர்கள்,

சப்பிரகமூவா மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மத்திய மாகாணத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள மிகவும் கஷ்ட பிரதேசம் கந்தலோயா தோட்டம். இங்கு வாழும் நாங்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றோம். பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்திச் (J.D.E.B) சபைக்குச் சொந்தமான இத்தோட்டம் நஷ்டத்தில் இயங்குகின்றது. எனவே ஒரு கிழமைக்கு மூன்று நாட்கள் மட்டுமே தொழில் கிடைக்கின்றது. ஏனைய நாட்களில் அருகாமையிலுள்ள பெரும்பான்மை இனத்திற்கு சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் நாட்கூலிக்கு எமது தோட்ட மக்கள் செல்கின்றனர்.

இவ்வாறான ஒரு தோட்டப் பின்னணியில் தான் நாம் கல்விகற்கும் கே/தெ/கந்தலோயா தமிழ் வித்தியாலயம் இயங்கி வருகிறது. இந்த பாடசாலையில் முதன்முதலாக 2013ம் ஆண்டே க.பொ.த சா/த வரை ஆரம்பிக்கப்பட்டு நாங்கள் பரீட்சைக்குத் தோற்றினோம்.

vidiyal2013_3தற்போது நாங்கள் ‘விடியல் 2013’ எனும் பெயரில் ஒரு குழுவாக இயங்கி வருகிறோம். திங்கட்கிழமை கணணி வகுப்புக்கும், செவ்வாய், புதன் ஆங்கில வகுப்புக்கும் செல்கிறோம். மற்றைய நாட்களில் ஒரு நாளை எமது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம். மிகுதி நாட்களில் மலையகம் மற்றும் ஏனைய இலக்கிய நூல்களை வாசிப்பதோடு, அரசியல் சார்ந்த செய்திகள், எமது உயர்தர கற்றலுக்குத் தேவையான விடயங்களை தேடிப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் உலகத் தரம்வாய்ந்த நல்ல சினிமாக்களையும் பார்க்கின்றோம்.

எங்களில் 7 பேர் உயர்தரம் கற்க 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளிமாவட்டத்திற்கு செல்ல இருக்கின்றோம். எமது சப்பிரகமூவா மாகாணத்தில் முறையான ஒரு உயர்தரம் கற்கும் பாடசாலை இல்லாததால்; பெரும்பாலும் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைக்கே செல்ல வேண்டியிருக்கிறது. இவ்வாறு செல்ல வேண்டுமென்றால் அங்கு விடுதிகளில் இருந்தே படிக்க வேண்டும். இதற்காகவும் மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய செலவுக்காகவும் ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு சுமார் 8000.00 இல.ரூபா [1]  செலவாகும்.

vidiyal2013_2எம்மால் படிப்பைத் தொடர முடியாது போனால், எங்கேயோ ஒரு இடத்தில் குறுகிய உலகப்பார்வையுடன் இருப்போம். அம்மா, அப்பா வேலைக்குச் செல்ல நாங்கள் சமையலுக்காக குசினியிலோ அல்லது  புடவைத் தொழிற்சாலையிலோ, பணக்காரர்களின் வீடுகளிலோ கூலி வேலை செய்து கொண்டிருப்போம்.

எமது பெற்றோர்கள் அனைவருமே தோட்டத் தொழிலாளர்கள். இதில் 05 மாணவர்களின் அப்பா இறந்து போக, அவர்களின் தாயின் உழைப்பிலேயே ஜீவியம் செய்கிறார்கள். ஏனைய இரு மாணவர்களின் வீட்டில் தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு சுகவீனமான நிலையில் இருக்க, ஒருவர் மட்டுமே தொழில் செய்கிறார்கள். எனவே எந்த விதத்திலும் எமக்கான கல்விக்கான செலவை எம்மால் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு இவ்வாறான ஒரு உதவி கிடைக்காவிட்டால் நாங்கள் தொடர்ந்தும் எமது கல்வியை முன்னகர்த்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றோம். எமது அனைவருக்கும் தொடர்ந்தும் படிக்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. கல்வியின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கின்றோம். எனவேதான் நாங்கள் உங்களை போன்ற நண்பர்களின் உதவியை நாடுகிறோம்.

vidiyal2013_5உங்களின் உதவி கிடைக்குமாயின் அதன் பெறுமதியை உணர்ந்து, அதற்கேற்றால் போல் படித்து, எங்களின் விருப்புகளுக்கும், கனவுகளுக்கும் உயிர் கொடுப்போம் என்பது எமது நம்பிக்கை.

எமது கனவு  நன்றாகப் படித்து, A/L இல் உயர்மதிப்பெண்கள் எடுத்து, பல்கலைக்கழகம் சென்று, எம்மை கல்வியில் ஆளுமை மிக்கவர்களாக நிலைநிறுத்துவதோடு சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது. மலையகம் மட்டுமல்லாமல் ஏனைய சமூகங்களின் வளர்ச்சிக்கும் எம்மால் இயன்றவரை பங்களிப்பது எமது விருப்பு.

எமது கனவுகளையும், விருப்புகளையும், நம்பிக்கைகளையும் தீர்மானிப்பதாக நிதியே இருப்பதால், நண்பர்களிடம் உதவியை எதிர்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நன்றி

அன்புடன்,
விடியல் 2013 மாணவர்கள்

_________________________________________

[1]  அண்ணளவாக 50.00 யூரோ

யுத்தம்

February 8, 2014

war

விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.

நான் பார்க்க விரும்பியதோ
அதிகாலை
சூரியனைத்தான்.

கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.

நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.

என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.

யுத்தம்.
பதில் வந்தது.

வெளியே போக
முடியவில்லை.

– விஜிகலா

(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)

10/2004

குழந்தைகளின் சொர்க்கம்

December 30, 2013

childrenofheaven-bubblesவேறு பாடசாலை ஆசிரியர்கள் வந்து தொலைக்காட்சியில் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நட த்தப்போவதாக எங்கள் ஆசிரியர் கூறினார். நாங்கள் பெரும் ஆவலோடு இருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் ஆசிரியர்கள் வருகை தந்து தொலைக்காட்சியில் படத்தைப் போட்டனர். நாங்கள் அனைவரும் மிக அமைதியாகப் பார்த்தோம்.

அப் படத்தில் பாடசாலை செல்லும் 2 பிள்ளைகள் பற்றியே கூறப்பட்டடிருந்தது. நாங்கள் நினைத்ததை விட மிகவும் நன்றாக இருந்தது. ஒரு பாதணியை இருவரும் பாவிக்கின்றனர். பெண்பிள்ளை வீட்டு வேலை செய்துகொண்டும், ஆண்பிள்ளை தன் தந்தைக்கு உதவி செய்தும் அந்த கஸ்ரமான குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு கல்வி கற்பதை நினைத்தால் மிகவும் கவலையாய் உள்ளது. எவ்வளவோ முயன்றும் ஒரு பாதணியை வாங்க முடியவில்லை. தமிழ் சினிமா திரைப்படத்தில் கதாநாயகன் வெல்லுவார் ஆனால் இந்தப் படத்தில் தோல்வியே எடுத்துக் காட்டப்படுகின்றது.

தமிழ் சினிமா பார்ப்பதைவிட இவ்வாறான படங்களை பார்ப்பதே மேலானது. கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சிறந்ததாகும். பார்த்தால் எங்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். எந்தவொரு பிரச்சனை வந்தாலும் எவ்வாறான தேவைகள் ஏற்பட்டாலும் கல்வியைத் தொடர்ந்து கற்க வேண்டும். ஆகவே கல்வியைக் கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

– கோசலாதேவி
(மட்டக்களப்பு/இலங்கை)
2012

 

 

அந்த சிறுவர்களின் குடும்பமானது மிகவூம் கஸ்ரப்பட்ட குடும்பமாகும். அதில் அச் சிறுமி வீட்டு வேலையைச் செய்து விட்டுதான் பாடசாலைக்கு செல்கிறாள். அச் சிறுவனானவன் தனது தந்தையுடன் வெளி நகருக்கு சென்று வேலைகளை மேற்கொள்கின்றான். அதிலும் அச் சிறுவர்கள் இருவரும் ஒரு பாதணிகளை வைத்துக் கொண்டே மிகவும் கஸ்ர நிலையில் அப்பாதணிகளை மாற்றி மாற்றி பாடசாலைக்கு அணிந்து கொண்டு செல்கின்றனர். இதனால் அச்சிறுவன் பாடசாலைக்கு செல்லும் நேரம் தாமதம் அடைகின்றது. இன்னிலையில் அச் சிறுவன் ஒரு விளம்பரத்தில் பாதணிக்கான ஓட்ட பந்தயத்தை அறிந்து அதில் அவன் பாதணியை பெற்றுக் கொள்வதற்காக போட்டியில் கலந்து கொண்டு பெரும் சிரமங்கள் மத்தியில் வெற்றி அடைகிறான்.

ஆனால் அச் சிறுவனுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் மட்டுமே வழங்கப்பட்டது. அவன் எண்ணிய பாதணி கொடுக்கப்படவில்லை. போட்டியில் கலந்து கொண்டதால் இருந்த பாதணியும் கிழிந்து போய்விட்டது. இதனை நினைத்து சிறுவன் கவலை அடைகின்றான்.

அதனைப் பார்க்கும் போது மிகவூம் வேதனையாக இருக்கின்றது. அத்தோடு இதனைப்பார்த்து கொண்டு இருந்த போது மனதுக்குள் ஏதோ ஒரு சஞ்சலமாய் இருந்தது. அத்தோடு அச் சிறுவனின் எதிர்பார்ப்பு தோல்வி அடைகின்றது.அச் சிறுவர்கள் பாதணி இருந்திருந்தால் பாடசாலைக்கு நன்றாக சென்று படித்திருப்பார்கள். இக் கஸ்ர நிலையிலும் அவர்களின் கற்கும் ஆர்வம் என்பன உணரப்படுகின்றது. இதன் மூலம் எனக்கு எப்படி கஸ்ரப்பட்டாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் தோன்றுகின்றது.

நாம் எவ்வாறு கஸ்ர நிலையில் இருந்தாலும் எம் மனதை தளர விடாமல் எச் சவால்களிலும் வெற்றி அடைந்து எனது இலட்சியத்தை அடைவேன் என்பது உறுதியாக எனக்கு உள்ளது.

– சி.யோகா
(மட்டக்களப்பு/இலங்கை)
2012