banner_04

விடியல் 2013


vidiyal2013_4விடியல் 2013,
கே/தெ/கந்தலோயா தமிழ் வித்தியாலயம்,
நாவலப்பிட்டி,
இலங்கை.
25.3.2014

உதவி.நண்பர்கள்,

சப்பிரகமூவா மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மத்திய மாகாணத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள மிகவும் கஷ்ட பிரதேசம் கந்தலோயா தோட்டம். இங்கு வாழும் நாங்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றோம். பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்திச் (J.D.E.B) சபைக்குச் சொந்தமான இத்தோட்டம் நஷ்டத்தில் இயங்குகின்றது. எனவே ஒரு கிழமைக்கு மூன்று நாட்கள் மட்டுமே தொழில் கிடைக்கின்றது. ஏனைய நாட்களில் அருகாமையிலுள்ள பெரும்பான்மை இனத்திற்கு சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் நாட்கூலிக்கு எமது தோட்ட மக்கள் செல்கின்றனர்.

இவ்வாறான ஒரு தோட்டப் பின்னணியில் தான் நாம் கல்விகற்கும் கே/தெ/கந்தலோயா தமிழ் வித்தியாலயம் இயங்கி வருகிறது. இந்த பாடசாலையில் முதன்முதலாக 2013ம் ஆண்டே க.பொ.த சா/த வரை ஆரம்பிக்கப்பட்டு நாங்கள் பரீட்சைக்குத் தோற்றினோம்.

vidiyal2013_3தற்போது நாங்கள் ‘விடியல் 2013’ எனும் பெயரில் ஒரு குழுவாக இயங்கி வருகிறோம். திங்கட்கிழமை கணணி வகுப்புக்கும், செவ்வாய், புதன் ஆங்கில வகுப்புக்கும் செல்கிறோம். மற்றைய நாட்களில் ஒரு நாளை எமது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம். மிகுதி நாட்களில் மலையகம் மற்றும் ஏனைய இலக்கிய நூல்களை வாசிப்பதோடு, அரசியல் சார்ந்த செய்திகள், எமது உயர்தர கற்றலுக்குத் தேவையான விடயங்களை தேடிப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் உலகத் தரம்வாய்ந்த நல்ல சினிமாக்களையும் பார்க்கின்றோம்.

எங்களில் 7 பேர் உயர்தரம் கற்க 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளிமாவட்டத்திற்கு செல்ல இருக்கின்றோம். எமது சப்பிரகமூவா மாகாணத்தில் முறையான ஒரு உயர்தரம் கற்கும் பாடசாலை இல்லாததால்; பெரும்பாலும் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைக்கே செல்ல வேண்டியிருக்கிறது. இவ்வாறு செல்ல வேண்டுமென்றால் அங்கு விடுதிகளில் இருந்தே படிக்க வேண்டும். இதற்காகவும் மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய செலவுக்காகவும் ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு சுமார் 8000.00 இல.ரூபா [1]  செலவாகும்.

vidiyal2013_2எம்மால் படிப்பைத் தொடர முடியாது போனால், எங்கேயோ ஒரு இடத்தில் குறுகிய உலகப்பார்வையுடன் இருப்போம். அம்மா, அப்பா வேலைக்குச் செல்ல நாங்கள் சமையலுக்காக குசினியிலோ அல்லது  புடவைத் தொழிற்சாலையிலோ, பணக்காரர்களின் வீடுகளிலோ கூலி வேலை செய்து கொண்டிருப்போம்.

எமது பெற்றோர்கள் அனைவருமே தோட்டத் தொழிலாளர்கள். இதில் 05 மாணவர்களின் அப்பா இறந்து போக, அவர்களின் தாயின் உழைப்பிலேயே ஜீவியம் செய்கிறார்கள். ஏனைய இரு மாணவர்களின் வீட்டில் தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு சுகவீனமான நிலையில் இருக்க, ஒருவர் மட்டுமே தொழில் செய்கிறார்கள். எனவே எந்த விதத்திலும் எமக்கான கல்விக்கான செலவை எம்மால் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு இவ்வாறான ஒரு உதவி கிடைக்காவிட்டால் நாங்கள் தொடர்ந்தும் எமது கல்வியை முன்னகர்த்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றோம். எமது அனைவருக்கும் தொடர்ந்தும் படிக்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. கல்வியின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கின்றோம். எனவேதான் நாங்கள் உங்களை போன்ற நண்பர்களின் உதவியை நாடுகிறோம்.

vidiyal2013_5உங்களின் உதவி கிடைக்குமாயின் அதன் பெறுமதியை உணர்ந்து, அதற்கேற்றால் போல் படித்து, எங்களின் விருப்புகளுக்கும், கனவுகளுக்கும் உயிர் கொடுப்போம் என்பது எமது நம்பிக்கை.

எமது கனவு  நன்றாகப் படித்து, A/L இல் உயர்மதிப்பெண்கள் எடுத்து, பல்கலைக்கழகம் சென்று, எம்மை கல்வியில் ஆளுமை மிக்கவர்களாக நிலைநிறுத்துவதோடு சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது. மலையகம் மட்டுமல்லாமல் ஏனைய சமூகங்களின் வளர்ச்சிக்கும் எம்மால் இயன்றவரை பங்களிப்பது எமது விருப்பு.

எமது கனவுகளையும், விருப்புகளையும், நம்பிக்கைகளையும் தீர்மானிப்பதாக நிதியே இருப்பதால், நண்பர்களிடம் உதவியை எதிர்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நன்றி

அன்புடன்,
விடியல் 2013 மாணவர்கள்

_________________________________________

[1]  அண்ணளவாக 50.00 யூரோ