banner_04
என்ன செய்கிறோம்

2002இல் யுத்தகாலத்தின்போது  சிறுவர் இல்லங்களுடன் தொடர்பு வைத்திருப்பது மட்டுமே சாத்தியமாயிருந்தது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வறிய நிலையிலிருந்த 5 சிறுவர் இல்லங்களுடன் தொடர்புகொண்டு, நண்பர்கள் தந்த நிதியுதவிக்கேற்ப, சிறுவர்களின் உணவு, உடை, உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை த் தேவைகளுக்கு எங்களால் இயலுமான உதவிகளைச் செய்திருந்தோம்.

எம்முடன் சுயாதீனமாக தொடர்புகொள்ள பிள்ளைகளுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டமை, பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அவர்களுக்கு சென்றடையாமை போன்ற முரண்களினால் தற்போது கிழக்கு மாகாணத்தில்  1 சிறுவர் இல்லத்துடனும், ஒரு கிராமிய அமைப்புடனும்,  மலையகத்தில் ஒரு பாடசாலையுடனும்  தொடர்புகளைத் தொடர்கிறோம்.

யுத்த சூழல் மாற்றமடைந்த நிலையில், பிள்ளைகளுக்கான உணவு, உடை,  போன்ற  அடிப்படைத் தேவைகளுக்கான உதவி என்பதைக் குறைத்து,  அவர்களின் கல்வி, சுய ஆளுமை விருத்திச் செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி வருகின்றோம்.

தற்போதைய எமது செயற்பாடுகள்:

storytellingகதை சொல்லல்.
சமூக முன்னேற்றத்துக்கு எதிரான  மத/சாதி/ இன/ மொழி/ நிற/ பால் அடிப்படையிலான பிற்போக்கான கருத்துக்களைக்  கொண்டிராத  கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை வாசிப்பதும், பிள்ளைகளுடன் கலந்துரையாடுவதும், அதனூடு பிள்ளைகளின்   வெளிப்பாட்டுக்கு இடமளித்தலும்.

..மாணிக்கவாசகர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வருடமொன்றிற்கு 48 முறை நடைபெறுகிறது. 25 பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.
.. பட்டிப்பளைப்பிரதேசத்தில் வருடமொன்றிற்கு 3 கிராமங்களில் , 144  தடவைகள் நடைபெறுகிறது. 200 க்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.
.. கந்தலோயாவில் பாடசாலைக் கல்வியுடன் இணந்ததாக நடைபெறுகிறது. 120 பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.

worldcinemaஉலக சினிமா பரிச்சயம்
சிறுவர்களுக்கான உலக சினிமாக்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளல். மொழிப் பிரச்சினை இருப்பதால் படங்களின் முக்கிய கருவைப் பற்றி  திரையிடலுக்கு முன்னர்  தமிழில் சொல்லப்படும். திரையிடலின் பின் பார்த்த படங்களைப் பற்றிப் பிள்ளைகளுடன் கலந்துரையாடல் நடைபெறும்.

.. பட்டிப்பளைப் பிரதேசத்தில், 6 கிராமங்களில் வருடத்தில் 36 முறை உலக சினிமா காட்டப்படுகிறது.  240இற்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.
.. மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்தில் கதைசொல்லலுடன் இணைந்ததாக காட்டப்படுகிறது.
.. கந்தலோயாவில் பாடசாலைக் கல்வியுடன் இணைந்ததாக ஆனால் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் காட்டப்படுகிறது.

slowlearning

 

மெல்லக் கற்றல்
வாகனேரி, குடும்பிமலை, வாகரை…. போன்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  கிராமங்களில் இருந்து வந்து, மாணிக்கவாசகர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கி இருக்கின்ற பிள்ளைகள் தாம் வாழ்ந்த சூழலின் பாதிப்பினால் அடிப்படை அறிவில் தம் வயதையொத்த பிள்ளைகளுடன்   சேர்ந்து நிற்க முடியாதவர்களாயுள்ளர்கள். இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவுமான பரீட்சயத்தை ஏற்படுத்துதல்.  அடிப்படையாகும்.  12 பிள்ளைகள் படிக்கின்றனர்.

 

 

preschool

 

அடிப்படைக் கல்விக்கு உதவுதல்
கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களுக்காக இரு ஆசிரியர்களுக்கான உதவி நிதி வழங்கப்படுகிறது. 164 பிள்ளைகள் படிக்கின்றனர்.

கந்தலோயா தோட்டத்தில் முன்பள்ளி ஒன்றினை நடைமுறைப்படுத்த ஆசிரியருக்கான உதவி நிதி வழங்கப்படுகிறது. இங்கு படிக்கும் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், எழுதுகருவிகளும் வழங்கப்படுகின்றன. 20 பிள்ளைகள் படிக்கின்றனர்.

 

 

computer

 

கணணி வகுப்புகள்
பட்டிப்பளைப் பிரதேசத்தில் வாரம் ஒன்றுக்கு 5 நாட்கள் நடைபெறுகிறது.  படிக்கின்ற பிள்ளைகளின் தொகை காலத்திற்கேற்ப மாற்றமடையும். சாதரணதரப் பரீட்சை எழுதிவிட்டு  பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் அதிகளவான பிள்ளைகள் பங்குபற்றுகின்றனர்.

 

 

 

hostelமாணவர் விடுதி
கந்தலோயாத் தோட்டத்தில் பாடசாலையானது மலையின் கீழே உள்ள பகுதியில் இருந்து ஆறு கிலோமீற்றர் உயரத்தில் உள்ளது. மேல் மலைக்கும் பாடசாலைக்கும் இடையேயான கரடுமுரடானதும், பற்றைகள் அடர்ந்ததுமான பாதையில் பிள்ளைகள்  பாடசாலைக்கு 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக நடந்தே வருகின்றனர்.  காலையும்,  மதியமும் 2+2 மணித்தியாலங்கள் நடப்பதால் பிள்ளைகள் முழுநாளுமே  சோர்ந்தும், களைத்துமிருக்கின்றனர். பாதையின் தூரமும், பயணத்தின் களைப்பும்  பிள்ளைகளையும், பெற்றோரையும் பாடசாலையையும், கல்வியையும் மறக்கச் செய்கின்றது. இதனால் மேல் மலையில் உள்ள பிள்ளைகள் பலர் பாடசாலைக்கு வராது வீட்டில் இருக்கின்றனர் அல்லது கூலி வேலைக்குப் போகின்றனர். இதனைக் கவனத்திலெடுத்து பிள்ளைகள் தங்கிப்படிப்பதற்கென்று பாடசாலைக்கு அருகில் விடுதி அமைக்கப்படுள்ளது.  20  பிள்ளைகள் விடுதியில் தங்கியிருந்து தமது கல்வியைத் தொடர்கின்றனர்.

 

 

eventசந்தோசப்பொழுதுகள் சிறுவர் சந்திப்பு.
வருடத்திற்கொருமுறை எம்முடன் தொடர்பிலுள்ள 400க்கு மேற்பட்ட பிள்ளைகள் ஒன்றாகச் சந்திக்கின்றனர்.   இந்தச் சந்திப்பு முற்பகல், பிற்பகல் என 2 நிகழ்வுகளாக இடம்பெறுகிறது. முற்பகலில் பிள்ளைகள் ஒன்றாக விளையாடுகின்றனர். முன்பு எங்களால் விளையாடப்பட்ட, இப்போது மறந்து போய்க்கொண்டிருக்கின்ற     பாரம்பரியமான விளையாட்டுக்களை அவர்களுக்குத் திரும்ப அறிமுகப்படுத்துகின்றோம்.  பிற்பகலில் கலைநிகழ்வுகள் இடம்பெறுகின்றன். கதை சொல்லல் மூலம் உள்வாங்கப்பட்டவையும், இப் பிரதேசங்களில் பாரம்பரியமாக இருக்கும் கலை வடிவங்களும் இந் நிகழ்வில் இடம்பெறுகின்றன. இதுவரை [2013] 3 சந்திப்புகள்    நடைபெற்றுள்ளன.

 

pookal3

 

 

சின்னஞ்சிறிய பூக்கள்  சிறுவர் நூல்
வருடம் ஒருமுறை வெளியிடப்படுகின்றது. கதைசொல்லல், உலக சினிமா செயற்பாடுகளில் பங்கெடுக்கும் பிள்ளைகளிடமிருந்து  கிடைக்கும் ஆக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுத் தொகுக்கப்படுகின்றன. இதுவரை [2014]  4 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல்கள் இலங்கைக்கு வெளியிலும் விநியோகிக்கப்படுகின்றன.