இலங்கை. மலையகம். கந்தலோயா.
1 தோட்டத் தொழிலாளியின் 1 நாள் சம்பளம் 3 EUR மட்டுமே. 1 மாதத்தில 14 நாட்கள் மட்டுமே வேலை. 1 மாதத்தில் மிகுதி 16-17 நாட்களுக்கு வருமானம் இல்லை. இவர்களின் வருமானம் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே போதாமையால் பல குடும்பங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகள் உழைப்பதற்குச் செல்லுகின்றனர் அல்லது வீட்டில் இருக்கின்றனர். வறுமையில் இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியைச் சாத்தியமாக்குவதற்கும் இதன் மூலம் வருமானம் போதாத பெற்றோருக்கு ஏற்படும் மேலதிக பொருளாதாரச் சுமையில் சிறிதளவைக்குறைப்பதற்கும், உங்கள் நிதி உதவுகிறது.
250 பிள்ளைகள் படிக்கின்ற கந்தலோயாத் தோட்டத்திலுள்ள பாடசாலைக்கு மொத்தமாக 22 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பது 8 ஆசிரியர்கள் மட்டுமே. தமிழ்- சிங்கள எல்லைப் பகுதியில்,
நகரில் இருந்து நீண்ட தொலைவில், போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருக்கின்ற இத் தோட்டப் பாடசாலைக்கு சிரமங்கள் கருதி ஆசிரியர்கள் வருவதில்லை. வருபவர்களும் நிலைத்திருப்பதில்லை. இந்த நிலைமையில் 12ஆம் வகுப்பு வரை வகுப்புக்களைக் கொண்ட இப் பாடசாலையானது எதிர்கொள்ளும் சிரமத்தினை ஓரளவாவது தவிர்க்கும் பொருட்டு உங்களால்
வழங்கப்படுகின்ற நிதி உதவி மூலமாகக் குறித்த பாடங்கள் தெரிந்த, ஆனால் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற இளைஞர்கள் ஆசிரியர்களாகக் கந்தலோயாப் பாடசாலைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள்.
இலங்கை. கிழக்கு மாகாணம்.
யுத்தத்தினால்/ வேறு காரணங்களால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் வாழுகின்ற பிள்ளைகள் தாம் வாழும் சூழலின் பாதிப்பினால் அடிப்படை அறிவில் தம் வயதையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து நிற்க முடியாதவர்களாயுள்ளார்கள். இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவுமான பரீட்சயத்தை ஏற்படுத்துதல் என்பது மெல்லக் கற்றல் செயற்பாட்டின் அடிப்படையாகும். இச் செயற்பாட்டை முன்னெடுப்பவர்களாக சமூக, பொருளாதார நிலைமையினால் தமது உயர்தரக் கற்றலைத் தாண்டித் தொடர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும்
இளைஞர்களை உங்கள் நிதி மூலம் வெளியுலகுக்கு அழைத்து வந்துள்ளோம்.
இந்தச் செயற்பாடுகள் தொடருவதும் வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதும் உங்களைப் போல் நண்பர்கள் தரும் நிதி மூலமே சாத்தியம். தொடர்ந்தும் உதவுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்துவிடுங்கள்.
உங்கள்
உதவி.நண்பர்கள்
Crowdfunding (முற்கூட்டிய நிதி)
இந்த வருடத்திலும் (2014) சிறுவர்களின் “சின்னஞ் சிறிய பூக்கள்” வெளியிடும் விருப்பில், இதற்கான நிதியை முற்கூட்டியே கோரி நண்பர்களுக்கு நவம்பர் 2013இல் நாம் அனுப்பிய கடிதத்தை இங்கே பிரசுரித்துள்ளோம். இக் கடிதத்திற்குப் பதில் தந்தவர்களுக்கும், ஆதரவு தரக்கூடும் என்று நாம் எண்ணிய நண்பர்களுக்கும் “சின்னஞ் சிறு பூக்கள் – 3” புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தோம்.
நிதி தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். இனியும் நிதி கிடைத்தால், மேலுள்ள விபரங்கள் புதுபிக்கப்படும்.
உதவி.நண்பர்கள்
(19.02.2014)
சிறுவர்களின் எண்ண வண்ணங்களால் மணம் பரப்பும் “சின்னஞ் சிறு பூக்கள் – 3” புத்தகத்திற்காக உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாமை /வறுமை காரணமாக சிறுவர் இல்லங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சிறுவர்கள்… யுத்தம் மற்றும் இயற்கையினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதியின் அடிப்படை வசதிகளற்ற நலிந்து போன எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள்….. இந்தப் பிரதேசங்களை விடவும் இன்னும் பின்தங்கிய கந்தலோயா தோட்டப்பகுதியிலும் வாழும் சிறுவர்கள்…..
இவர்கள்தான் சின்னஞ்சிறு பூக்களின் ஆக்கதாரர்கள்.
கதைசொல்லல், கதைகேட்டல், ஆடல், பாடல், நடித்தல் விளையாடுதல், எழுதுதல், பகிர்ந்து கொள்ளல் என்ற சுய பங்கு பற்றுதல்களுக்கு இடமிருப்பதால் பிள்ளைகள் தமது ஆற்றலை மட்டுமல்ல மனக்குமுறல்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
பிள்ளைகளின் உலகங்களை ஒன்று சேர்த்து அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பின் வெளிப்பாடாய் சின்னஞ்சிறிய பூக்கள் 3 இனை நூலுருவாக்கியுள்ளோம். தமது ஆக்கங்கள் மூலம் பிள்ளைகள் உங்களுடன் மட்டும் பேசவில்லை, தாம் யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதனையும் எழுத்தாக்கியுள்ளார்கள்.
இத் தொகுப்பின் ஆக்கங்களை ஒப்பிடுதல், பொதுமைப்படுத்துதலை விடவும் அவற்றை அவ்வவ் சமூக பின்னணியில் வைத்து உணர்தலும், வாசித்தலுமே அப்பிள்ளைகளின் தனித்துவத்தையும் அவர்களின் உலகத்தையும் அறிய உதவும். இந் நூல் பற்றிய உங்கள் கருத்துகள் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்தும்.
அரசு, அரசு சாரா நிறுவனங்கள் எதனிடமும் நாம் எமது செயற்பாடுகளுக்கு பணம் வாங்குவதில்லை. உங்களைப் போன்ற நண்பர்கள் செய்கின்ற நிதியுதவி மட்டுமே எங்களுக்கான ஒரேயொரு நிதி மூலம். நண்பர்களிடம் கடன் வாங்கி “சின்னஞ் சிறு பூக்கள் – 3” புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டுவிட்டோம். அடுத்த வருடம் “சின்னஞ் சிறு பூக்கள் – 4″ஐ வெளியிட எம்மிடம் நிதியில்லை. பிள்ளைகள் ஆர்வமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் இன்னும் நிறைய வைத்திருக்கிறார்கள். “உங்கள் ஆக்கங்களைப் புத்தமாக்குவோம்” என்று அவர்களிடம் உறுதி கூற எங்களுக்கு உங்களைப் போன்ற நண்பர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.
“சின்னஞ் சிறு பூக்கள் – 3” புத்தகத்திற்காக உங்களால் இயன்ற நிதியைத் தருவீர்களாயின் அந் நிதியைக் கொண்டு அடுத்த புத்தகத்தையும் வெளியிடுவோம் என்ற மகிழ்ச்சியைப் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வோம்.
உங்களுக்கு ஆர்வமிருப்பின் கீழுள்ள விபரங்களைத் தாருங்கள்.
தேவைப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை:
புத்தகம் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் பிள்ளைகள், அவர்களுடன் இணைந்து செயற்படும் நண்பர்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள்.
உதவி.நண்பர்கள் சார்பாக
அமலா