எப்படிச் செய்கிறோம்
சிறுவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களுக்குப் போகின்றோம். அந்தந்த இடங்களிலுள்ள சிறுவர் இல்லங்கள், கிராமிய அமைப்புகள், பள்ளிக்கூடங்களுடன் தொடர்பு கொள்கின்றோம். சிறுவர்களுக்குத் தேவையான செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுகின்றோம். சிறுவர்களின் கல்வி, ஆளுமை சார்ந்த தேவைகளை முதன்மைப்படுத்துகின்றோம். இணைந்து நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றிய உடன்பாடுகளை அந்தந்த இடங்களிலுள்ளவர்களுடன் செய்து கொள்கின்றோம்.
நாம் போன இடங்களிலுள்ள சிறுவர்களின் தேவைகள், அதற்காக இணைந்து செயற்பட உடன்பட்ட அமைப்புகள், நண்பர்கள், நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகள், இதற்கான நிதி…. இவை பற்றி உதவி.இணையம், உதவி.வலைப்பதிவு, சமூக இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், நேரடித் தொடர்புகள் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
எமது செயற்பாடுகளில் உடன்படும் நண்பர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அரசு, அரசு சாரா தன்னார்வக்குழுக்களிடம் நிதி பெறுவதில்லையென்று உறுதியாக இருப்பதால் நண்பர்கள் தவிர்ந்த வேறெந்த நிதிமூலங்களும் எமக்கில்லை.
ஜேர்மன் நண்பர்களால் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான Kriegswaisenhilfe Sri-Lanka e.V இன் வங்கிக்கணக்கிற்கு நண்பர்களின் நிதி வந்து சேருகிறது. வங்கிக்கூலியை இயன்றவரை குறைப்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டும் இலங்கையிலிருக்கும் நண்பரின் வங்கிக் கணக்கிற்கு நிதி அனுப்பப்படுகிறது. இலங்கைக்கு நிதி அனுப்புவதற்காகவும், வங்கிக்கணக்கு வைத்திருப்பதற்காகவும் வங்கியால் அறவிட்டப்படும் கூலி மட்டுமே எமக்குக் கிடைக்கும் நிதியிலிருந்து உதவி. செயற்பாடுகளுக்கல்லாமல் எடுக்கப்படும் ஒரேயொரு செலவாகும்.
இலங்கை வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் நிதி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கையிருப்பில் நிதி இருப்பதில்லையாதலால், மேலதிக தேவைகளுக்கு ஊரில் தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்குகின்றோம். அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் கடன் மீளக் கொடுக்கப்படுகிறது.
செயற்பாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும் நிதி உரிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை அந்தந்த இடங்களுக்கு போய் நேரில் பார்த்து உறுதி செய்து கொள்கிறோம். செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துபவர்களினால் கணக்கு அறிக்கைகள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.
இலங்கையிலிருந்து வரும் கணக்கு அறிக்கைகள், இலங்கை வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டு, ஜேர்மன் வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டுகள் என்பன Kriegswaisenhilfe Sri-Lanka e.V அமைப்பினால் ஜேர்மன் நிதித்திணைக்களத்திடம் கண்காணிப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறது. நிதி விபரங்கள் சரிபார்க்கப்பட்டபின் ஜேர்மன் நிதித் திணைக்களத்தால் நிதி தந்தவர்களுக்கான வரிச்சலுகை (ஜேர்மனியில் வசிப்பவர்களுக்கு மட்டும்) அனுமதி தரப்படும். நிதி தந்தோர் எந்நேரத்திலும் முழு நிதி விபரங்களையும் உதவி. இணையத்தில் பார்வையிடலாம்.
இலங்கையில் உதவி.செயற்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு வருபவர்கள், எங்களுக்குக் கிடைக்கின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் பார்த்துக்/கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய வழி என்றும் திறந்தேயுள்ளது.