banner_04
என்ன செய்கிறோம்

இலங்கையின் தமிழ்பகுதிகளில் சமூக, பொருளாதார நிலையில் பிந்தங்கியவர்களாக வாழுகின்ற பிள்ளைகளே எமக்கான இலக்குக் குழுவாக இருக்கின்றனர். இவ்விதம் பல இடங்கள் இருக்கின்ற போதிலும் எமக்கான நிதி வளத்தின் பொருட்டு குறித்த சில இடங்களில் மட்டுமே எம்மால் செயற்பட முடிகின்றது. அவ்வகையில் தற்போது கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள சில இடங்கள் மற்றும் செங்கலடிப் பகுதியிலுள்ள கடலூர் கிராமம் என்பனவும் மலையகத்தில் கந்தலோயாத் தோட்டமும் எமது செயற்பாட்டு இடங்களாக உள்ளன.

எமது இணைப்பின் ஆரம்ப காலமான 2002 காலப்பகுதியானது யுத்த காலமாக இருந்ததனால் சிறுவர் இல்லங்களுடன் தொடர்பு வைத்திருப்பது மட்டுமே அப்போது எமக்குச் சாத்தியமாயிருந்தது. அதனால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் வறிய நிலையிலிருந்த 5 சிறுவர் இல்லங்களுடன் தொடர்புகொண்டு, நண்பர்கள் தந்த நிதியுதவிக்கேற்ப, சிறுவர்களின் உணவு, உடை, உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எம்மால் இயலுமான உதவிகளைச் செய்திருந்தோம்.

யுத்த சூழல் மாற்றமடைந்த நிலையில், வெவ்வேறு காரணங்களால் இல்லங்களில் இணைய முடியாமல்/விரும்பாமல் வீட்டிலிருக்கின்ற பிள்ளைகளை நோக்கி எமது செயற்பாடு நகர்ந்தது. இதன்போது உணவு, உடை, போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவி என்பதைக் குறைத்து, அவர்களின் கல்வி, சுய ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகளை முதன்மைப் படுத்தி வருகின்றோம்.

அவ்வகையில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இச் செயற்பாடுகள் யாவும் அவ்வவ் பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்களினூடாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

மெல்லக் கற்றல்

யுத்தத்தினால்/ வேறு காரணங்களால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் வாழுகின்ற பிள்ளைகள் தாம் வாழும் சூழலின் பாதிப்பினால் அடிப்படை அறிவில் தம் வயதையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து நிற்க முடியாதவர்களாயுள்ளார்கள். இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவுமான பரீட்சயத்தை ஏற்படுத்துதல் என்பது மெல்லக் கற்றல் செயற்பாட்டின் அடிப்படையாகும்.

மட்டக்களப்பில் பட்டிப்பளைப் பிரதேசத்தில் நாற்பது வட்டை, கொல்லநுலை, மாவடி முன்மாரி ஆகிய இடங்களிலும் செங்கலடிப் பிரதேசத்தில் கடலூரிலும் இச் செயற்பாடானது இடம்பெற்று வருகின்றது.

 

 

கதை சொல்லல்

சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட, பகுத்தறிவு, அறிவியல், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பாடல்கள், ஆடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை வாசிப்பதும் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவதும், அதனூடு பிள்ளைகளின் சுய வெளிப்பாட்டுக்கு இடமளித்தலும் என்பன இச் செயற்பாட்டின் அடிப்படையாகும். மட்டக்களப்பில் பட்டிப்பளைப் பிரதேசத்திலுள்ள நாற்பதுவட்டை, மாவடி முன்மாரி, கொல்லநுலை ஆகிய இடங்களிலும், செங்லடிப் பிரதேசத்தில் கடலூரிலும் இச் செயற்பாடானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

 

 

 

ஆசிரியர்களுக்கான நிதி

எங்களுடன் இணைந்துள்ள கந்தலோயாத் தோட்டத்திலுள்ள பாடசாலைக்கு மொத்தமாக 22 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பது 8 ஆசிரியர்கள் மட்டுமே. தமிழ்- சிங்கள எல்லைப் பகுதியில், நகரில் இருந்து நீண்ட தொலைவில், போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருக்கின்ற இத் தோட்டப் பாடசாலைக்கு அரசு ஆசிரியர்களை நியமிக்கின்ற போதிலும் இப் பாடசாலைக்குச் செல்வதில் உள்ள சிரமங்கள் கருதி ஆசிரியர்கள் வருவதில்லை. வருபவர்களும் நிலைத்திருப்பதில்லை. இந்த நிலைமையில் 12ஆம் வகுப்பு வரை வகுப்புக்களைக் கொண்ட இப் பாடசாலையானது மிகுந்த சிரமத்தினை எதிர்கொள்கின்றது. இச் சிரமத்தினை ஓரளவாவது தவிர்க்கும் பொருட்டு பெற்றோராலும் எம்மாலும் வழங்கப்படுகின்ற நிதி உதவி மூலமாகக் குறித்த பாடங்கள் தெரிந்த, ஆனால் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற இளைஞர்கள் ஆசிரியர்களாகக் கந்தலோயாப் பாடசாலைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள்.

 

மாணவர்களுக்கான நிதி

கந்தலோயாப் பாடசாலையில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்/உறவினர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே. ஒரு மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதோடு, வேலைக்குச் செல்லும் நாட்களுக்கு மட்டுமே கூலியும் வழங்கப்படுகின்றது. மிகக் குறைந்த கூலியில் அதிக நேரம் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக உள்ளதனால் இவர்களின் வருமானம் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே போதாததாக உள்ளது. இதனால் பல குடும்பங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகள் உழைப்பதற்குச் செல்லுகின்றனர். அல்லது வீட்டில் இருக்கின்றனர். இவ்வாறான பிள்ளைகள் அவர்கள் கல்வியைத் தொடருவதற்கு உதவுவதன் மூலம் வருமானம் போதாத பெற்றோருக்கு ஏற்படும் மேலதிக பொருளாதாரச் சுமையில் சிறிதளவைக் குறைக்கின்றோம். பிள்ளைகளுக்கும் கல்வியைச் சாத்தியமாக்குகின்றோம்.